Tuesday, August 3, 2010

துன்பத்திலும் இன்பம்

மகிழ்ச்சியை நோக்கியே உலகம் இயங்குகிறது. 'மகிழ்ச்சி கிடைக்காது' எனில், ஒரு செயலைச் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. வழியெல்லாம் வலி இருந்தாலும், முடிவில் இன்பம் இருக்கும் எனில் அந்தச் செயலைச் செய்யலாம் எனும் அடிப்படைத் தத்துவ‌த்தில்தான்,சாக‌ச‌ம் புரியவும் சாதனை படைக்கவும் மானுடம் தொடர்ந்து முயற்ச்சி மேற்க்கொள்கிறது. அப்போது நேருகிற மரணத்தைக்கூட இன்பம் என்றெண்ணி மகிழ்கிற‌து.

மகிழ்ச்சியை களவாடுகிற உணர்ச்சி, கோபம். துக்கத்தில்கூட சிறிதேனும் மகிழ்ச்சி ஒட்டிக்கொண்டிருக்கும். ஆனால், கோபத்தில் துளியும் மகிழ்ச்சி இருப்பது இல்லை.வயதானவர்களாக இருந்தாலும், அவர்களது மரணம் துக்கத்தை ஏற்ப்படுத்தும். ஆனாலும் ' நல்ல சாவு' என மனம் கொஞ்ச‌ம் மகிழ்ச்சியுறும்.; கோபம் அப்படிப்பட்டதல்ல!

துக்கம் -‍ விரிசல்; கோபம் -‍ பிளவு. துக்கம் ‍- வெள்ளம்; கோபம் -‍ ஆழிப்பேரலை. கோபம் வருகிறபோதும், அதைப் பாதுகாக்கிற‌போதும், அதற்குப் பிறகு வெகுநேரம் அதையே எண்ணி, உடலின் ஒவ்வொரு அவயமும் படபடக்கும்;

இதயம் வேக‌மாக இயங்கும்; மூச்சு வாங்கும்; முகம் சிவக்கும்; நாக்கு வறளும்; நெஞ்ச‌‌ம் பதைபதைக்கும்; மலைமேல் ஏறும் மிதிவண்டிபோல நுரையீரல் திணறும். கோபம் மற‌‌‌ந்தாலும், அது ஏற்ப‌டுத்திய தடயங்கள் மட்டும் அப்படியே தங்கிவிடும்.

மேலாண்மை வகுப்புக்களில், 'கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?" என இன்றைக்கும் ஏகப்பட்ட வழிமுறைகளைச் சொல்லிதருகின்றனர். ஏனெனில், அதிகாரிகளின் கோபத்தால், அலுவலக இயக்கமே பாதிக்கப்பட்டுவிடும்.

சொந்த வாழ்வில் இயலாமைமற்றும் வெளியுலகில் எதிர்ப்பார்த்தது நிகழாதது ஆகியவற்றால் கோப‌ம் ஏற்படுகிற‌து. அந்த‌ ஆற்றாமையான‌து, புல‌ன்க‌ளின் வ‌ழியே வார்த்தைக‌ளாக‌ வ‌ழிந்தோடுகிற‌து. சின்ன‌தொரு ச‌ம்ப‌வ‌த்துக்கே ஒடிந்துவிடுப‌வ‌ர்க‌ள் உண்டு.

க‌ண‌வ‌ன் ம‌னைவி ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌தைச் சொல்ல‌மாட்டார்க‌ள். என்றேனும் ஒருநாள், அவ‌ர்க‌ளின் புரித‌ல் பிச‌கானால், அவ‌ர்க‌ளின் கோப‌ம் பூத‌க‌ர‌மாக‌க் கிள‌ம்பி , பூக‌ம்ப‌ங்க‌ளை ஏற்ப்ப‌டுத்தும். 'இத்த‌னை நாள் எவ்வ‌ல‌வு அன்புட‌மன் ந‌ட‌ந்துக்கொண்டார்' என‌ப் ப‌ழைய‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ஒரு நிமிட‌ம் நிநைத்துப் பார்த்தால், அந்த‌ பிற‌ழ்வைப் பெரிதுப‌டுத்தாம‌ல் சென்றுவிட‌லாம்.

உற‌வோ, ந‌ட்போ.... ஒருவ‌ர் ந‌ம்மைக் காய‌ப்ப‌டுத்தும்போது, அவ‌ர்க‌ள் அன்புட‌ன் ந‌ட‌ந்துக்கொண்ட‌ நிக‌ழ்வுக‌ளை நினைத்தால், ந‌ம‌து கோப‌மும் அத‌னால் ஏற்ப்ப‌டும் உளைச்ச‌லும் ச‌ம‌ன் செய்ய‌ப‌ட்டுவிடும். நாம் துன்ப‌த்தில் இருந்த‌போது அவ‌ர்க‌ளின் தோளில் சாய்ந்துகொண்ட‌ நினைவுக‌ளை எண்ணிப்பார்த்தால், அவ‌ர்க‌ள் மீது வ‌ன்ம‌ம் ஏற்ப‌ட‌ வாய்ப்புக‌ளே இருக்காது. நெருக்க‌டி நேர‌ங்க‌ளில் ந‌ம் அருகுல் இருந்து ஆறுத‌ல் சொன்ன‌ அவ‌ர்க‌ளை ஒரு க‌ண‌ம் நினைத்தால், ம‌ன‌தில் ம‌டிப்பு விழாது. முள் குத்திய‌த‌ற்காக‌க் காலை வெட்டி எறிவ‌துபோல் ந‌ட‌ந்துகொள்ளும் ந‌ம‌து செய‌ல்க‌ள்ந‌ம‌க்கு புல‌ப்ப‌ட‌ துவ‌ங்கும்.

ந‌ண்ப‌ர்க‌ளுக்குள் சின்ன‌ சின்ன‌ வ‌ருத்த‌ங்க‌ள் வ‌ருவ‌து இய‌ல்புதான். வ‌ருத்த‌மே வ‌ராத உற‌வுக‌ள் வ‌லுவான‌வை அல்ல‌ என்ப‌தே உண்மை. மேம்போக்கான‌ உற‌வுக‌ளில், எப்போதும் புன்ன‌கைதான். ஆழ‌மான‌ ப‌கிர்த‌லில் அவ்வ‌ப்போது மூச்சுத் திண‌றுவ‌தும் உண்டு. அவ‌ர்க‌ளை சமாதான‌ப் ப‌டுத்துவ‌து ந‌ம‌து க‌ட‌மை. ந‌ல்ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் சின்ன‌ கார‌ண‌த்துக்காக‌ப் பிரிகிற‌போது, உல‌க‌ உள்ளுண‌ர்விலேயே ஒரு சுருக்க‌ம் நிக‌ழ்கிற‌து.

என‌க்கும் ந‌ண்ப‌ர் ஒருவருக்கும் , க‌ல்லுரியில் ப‌டிக்கும்போது சின்ன‌ ம‌ன‌த்தாங்க‌ல். எங்க‌ள‌து மூத்த‌ மாண‌வ‌ர் ஒருவ‌ருக்கு இந்த‌ விஷ‌ய‌ம் தெரிந்த‌து./ எப்போதும் ஒன்றாக‌வே... தும்முவ‌தைக்கூட‌ தாள‌க‌தியில் செய்கிற‌ எங்க‌ளின் பிண‌க்கு அவ‌ருக்கு வ‌ருத்தை த‌ர‌ , ஒருநாள் என்னை அழைத்த‌வ‌ர் , "உன் ந‌ண்ப‌ர் உன்ன‌ப்ப‌ற்றிப் பெருமையாக‌ச் சொன்னார். உன்னிட‌ம் பேச‌ அவ‌ருக்கு ஆசை" என்றார். ம‌றுநாள் அவ‌ர‌து அறைக்கு, எங்க‌ள் இருவ‌ரையும் தேநீர் அருந்த‌ அழைத்தார். அத‌ன்பிற‌கு எங்க‌ளின் ந‌ட்பு மீண்டும் ம‌ல‌ர்ந்த‌து. இன்றுவ‌ரை, எங்க‌ளின் தொட‌ர்பு ஜீவ‌ந‌தியாக‌ ஒடிக்கொண்டு இருக்கிற‌து.

கேள்விபட்ட சம்பவம் ஒன்று :
புதிதாக திருமணமான தம்பதியிடம், மணப்பெண்ணின் தாய் பரிசுப்பொருள் ஒன்றைத்
தந்தாள். பிரித்துத் பார்த்தால், அது அவர்கள் இருவரின் பெயரிலுமான வங்கிக் கணக்கு.
தாய் சொன்னாள் : "நீங்கள் இருவரும் எப்போதெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறீர்களோ, உங்களை ஆனந்தத்தில் ஆழ்த்துவது போலான சம்பவம் எப்போதெல்லம் நடக்கிறதோ, அந்த வேளையில், உங்களின் வங்கி கணக்கில் ஒருவர் பணம் போடவேண்டும். அதற்கான காரணத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இதை தவறாமல் செய்யுங்கள். சேமிக்க இது ஒரு சிறந்த வழி!"

இரண்டு வருடங்கள் இனிதே கழிந்தது தாம்பத்தியம். எப்போதும் மகிழ்ச்சி, கும்மாளம், கொண்டட்டம் எனப் போய்க்கொண்டு இருந்த மண வாழ்க்கையில், திடீரென இரண்டு பேருக்கிடையிலும் முளைத்தது கருத்து வேற்றுமை. ' இனி சேர்ந்து வாழ முடியாது' என அறிவிப்பில் மட்டும் ஒற்றுமையை கடைப்பிடித்தனர். நீதிமன்றம் செல்லவும் துணிந்தனர். 'பரஸ்பர ஒப்புதல்' மூலம் விரைவில் மண முறிவு பெறலாம் என எண்ணினர்.

அந்த பெண், தாயரிடம் சென்று சேதி சொன்னாள். "இனி சேர்ந்து வாழ முடியாது என முடிவெடுத்தால், பிரிய வேண்டியதுதான். ஆனல் அதற்குமுன், உங்களது பங்கினை சரியாக பிரித்துக்கொள்ளுங்கள். உங்களது இணைந்த வங்கி கணக்கில் உள்ள பணத்தில் நீ போட்ட பணத்தை நீயும், உன் கணவர் போட்ட பணத்தை அவரும் எடுத்துக் கொள்ளுங்கள்" என்றாள் தாயார்.

அதன்படி பீரோவுக்குள் வைத்திருந்த வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்துப் பார்த்தனர். மனைவிக்கு மேல்படிப்பில் வெற்றி கிடைத்ததும் அவளின் பெயரில் 20,000 ரூபாய் போட்டிருந்தான் கணவன். மனைவிக்கு நல்ல வேலை கிடைத்ததும் 10,000 ரூபாய் போட்டிருந்தான். அதேபோல், கணவனுக்கு பதவி உயர்வு கிடைத்த தருணத்தில் அவன் பெயரில் 10,000 ரூபாய் போட்டிருந்தாள் மனைவி. இப்படியான பதிவுகள் மூலம் மொத்தம் 2 லட்சம் ரூபாய் கணக்கில் இருந்தது.

ஒவ்வொரு பதிவும் அவர்கள் கொண்டாடிய நிகழ்வுகள் நினைவுக்கு வந்தன. அப்போது இருவரும் நெருக்கமாக, அன்பாக, உயிருக்கு உயிராக உணர்ந்த நொடிகள் நிழலாடின. அவற்ரை நினைக்க கண்ணீர் சுரந்தது. துணையை சிநேகத்துடன் உணரமுடிந்தது. பிரியப் போகிறோமே எனும் உண்மை உறுத்தியது.
இவ்வளவு நெருக்கத்தையும் எப்படி நம்மால் தூக்கி எறியவும், மரக்கவும் முடிந்தது' என வருந்தினார்கள். இருந்தாலும் தன்முனைப்பு....'பனத்தை வங்கியிலிருந்து எடுத்து வருகிறேன்' என கிளம்பி சென்றவன், ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்தான். வங்கி கணக்குப் புத்தகத்தைப் பிரித்து மனைவியிடம் தந்தான். அதில் அன்றைய தேதியில், 'இருவரும் மருபடி இணைந்ததற்காக' என்று எழுதி, 50,000 ரூபாய் செலுத்தப் பட்டிருந்தது.

தன்முனைப்பை சற்று தள்ளி வைத்ததும், தேவையற்ற‌ கோபத்தை ஒதுக்கி வைத்தும் வாழத் தெரிந்தால் மகிழ்ச்சி பொங்கும்; வருகின்ற கவலைகள் முகாமிடாமல் உடனே ஓடும்.

'நமது மகிழ்ச்சியை பலரிடமும் பகிர்ந்து கொள்ளலாம்; துக்கத்தை பகிர்ந்துக் கொள்ளக்கூடாது' எனும் சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்று உண்டு. நண்பர்கள், நாம் பகிர்ந்து கொள்ளாமலேயே நமது துக்கத்தை உணர்வார்கள். அப்படி உணராதவர்கள் நண்பர்களே அல்லர். அவர்களிடம் பகிர்ந்துகொள்ளாததால் எந்த பதிப்பும் இல்லை.

அடுத்தவரின் மகிழ்ச்சியை குலைப்பதற்காகவே வாழ்ப்பவர்களும் உண்டு. அப்படிபட்டவர்கள், நம்மைப் பற்றி எவரேனும் அவதூறாகப் பேசினால், உடனே நம்மை தொலைப்பேசியில் தொடர்ப்பு கொண்டு சேதியை கக்குவார்கள். நல்லவிதமாக பேசியிருந்தாலோ, தெரிவிக்கவே மாட்டர்கள். நம்மிடம் நெருங்குவதற்காக, தீயவற்றை மட்டும் வடிகட்டி வழங்கி, நமக்கு நெருக்கமானவர்களாக நடித்து ஏமாற்றுவார். அவர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தாலே, 'ஏதோ கெட்ட சேதி ' எனத் தெரிந்துகொள்ளலாம். அவர்களின் எண்னை அலைப் பேசியில் பார்த்தாலே, நமக்கு நடுக்கம் வந்துவிடும்.

துன்பம் வரும்போது பக்குவத்துடன் எதிர் கொள்பவர், கோபப்படுவதில்லை. துன்பத்தைத் தனது சாமர்த்தியத்தால் கிள்ளி எறிந்துவிட்டு முன்னேறுவார். துன்பத்தை நாம் கொடுக்கும் முக்கியத்துவமே, அதை பெரிதாக்குகிறது!


எழுத்து : வெ. இறைய‌ன்பு

நன்றி : சக்தி விகடன் 25.07.10

No comments:

Post a Comment